திருத்தல வரலாறு
திருக்கோவில் இருப்பிடம் :
அகண்ட காவேரி கரைக்கு வடக்கேயும், கொல்லிமலைக்கும் தெற்கேயும், கொளக்குடி - பவித்திரம் மெயின்ரோட்டிற்கு மேற்கேயும், திருச்சி - நாமக்கல் மெயின்ரோட்டிற்கு கிழக்கேயும் உள்ள தலைமலை உச்சியில் அதிசயிக்க தக்க வகையில் ஓரே பாறையில் அருள்மிகு தானா வளர்ந்த பெருமாள் ஆலயம் பெரும்பழமையும், தொன்மையும் வாய்ந்தது வைணவ சிறப்பு பெற்ற ஆலயமாக அமைந்துள்ளது.
மூலவர் :
தானா வளர்ந்த தலைமலை அருள்மிகு நல்லேந்திர பெருமாளின் மறுபெயர் அருங்கல் நல்லையன் எனவும் அழைப்பார்கள் .
மலையின் அதிசயம் :
இத்திருகோவில் இருக்கும் மலைத்தொடர் அதிசய தோற்றத்தோடு இயற்கையாக காட்சியளிப்பதை நாம் நமது கண்கூடாக பார்க்கலாம். ஓரு மனிதன் மல்லாந்து படுத்து இருந்தால் அவனது தலையும், முகப்பகுதியும் எப்படி அமைந்துள்ளதோ அதே மாதிரிதான் இந்த அதிசய மலை. தலைமலை பல நூற்றாண்டுகளுக்கு முன் சிரகிரி மலை என்ற பெயரில் அழைக்கப்பெற்றது. சிர(தலை) கிரி(மலை) அதனால் தான் இதற்கு தலைமலை எனப்பெயர் பெற்றது.
எமன் சனியனால் பிடிக்கப்பட்டு அல்லல் உற்றப்போது இந்திரனிடம் விலக வரம் கேட்க அதற்கு இந்தின் தலைமலையில் உள்ள கன்னிமார் சுனையில் நீராடி தலைமலை மேல் எளுந்தருளி இருக்கும் அருள்மிகு நல்லேந்திர பெருமாளை நாள்தோறும் வழிபாடு செய்தால் சனிதோஷம் விலகும் என்றார். இந்திரன் வரம் அருளியபடி எமன் தலைமலை அருள்மிகு நல்லேந்திர பெருமானை கன்னிமார் சுனையில் நீராடி வழிபாடு செய்து சனிதோஷம் நீங்கப் பெற்றார். இது தை திருவோன அன்று சாமிக்கு நெய்வேத்தியம் செய்து வடை மாலை சாற்றி திருக்கோடி தீபம் ஏற்றப்படும்.
புரட்டாசி திருவிழா காலங்களில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடிபகவான் பூஜை வாங்கும். அந்நிகழ்ச்சி வழக்காமாக புரட்டாசி மாதத்தில்தான் நடைபெறும். இடி பகவான் பூஜையின் போது சுவாமி இருக்கும் கட்டிடத்தின் மேற்புறம் விரிசல் ஏற்படுவதும் பின் சுவாமியின் திருவருளால் விரிசல் ஒன்று சேர்வதும் இன்றும் நடந்து வரும் ஒரு அதிசயம்.
இதிகாச வரலாறு :
இராமாயணத்தில் இந்திரஜித் விட்ட அம்பினால், ராமர், லட்சுமணன், வானரங்கள் மயக்க முற்றனர். இவர்களின் மயக்கம் நீங்க ஜாம்பவான் அனுமானை நோக்கி சஞ்சீவி மூலிகையை பல இடங்கிளில் தேடி கிடைக்காமல் சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்தார். சஞ்சீவி மலையின் மூலிகையின் மணம் பெற்றவுடன் அனைவரும் மயக்க நிலை நீங்க பெற்றனர். ஜாம்பவான் அனுமானை நோக்கி மீண்டும் சஞ்சீவி மலையை கட்டி பலம் கொண்ட மட்டும் வீசி எறிந்தார். சஞ்சீவி மலையின் சிதறுண்டு விழுந்த தலைப்பகுதி தலைமலை என்றும் அழைக்கப்படுகிறது.
மூலிகை மகிமை :
சஞ்சீவி மூலிகை இம்மலையில் உள்ளதால் இன்றும் விஷப்பூச்சிகள், பாம்புகள் மலைக்கு வருபவர்களை கடித்தால் அவர்கள் உயிருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படுவதில்லை.
குழந்தை பேறு :
குழந்தை பேறு இல்லாத மணமக்கள் அருள்மிகு பெருமானை வேண்டிக்கொண்டால் குழந்தைபேறு கிட்டும். குழந்தைபேறு கிட்டிய பின்னர் தலைமலை உச்சியில் உள்ள அருள்மிகு நல்லேந்திர பெருமாள் திருக்கோவில் சுற்றி உள்ள 3 அங்குல அளவில் உள்ள கற்படியை கிரி சுற்றுவது அதிசயத்திலும் அதிசயம் சன்னியாசியப்பனை வேண்டி பெண்கள் தங்களைடைய முந்தானையை கிழித்து தூக்கு கட்டி வேண்டி செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய உடன் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்து திருக்கோடி ஏற்றுவார்கள். இத்தீபம் 20 மைல் சுற்றளவுக்கு தெரியும். அதை பக்த கோடிகள் வணங்கிறார்கள்.
திருக்கோவில் எழுந்தருளிய வரலாறு :
தலைமலையின் மேற்குப் பகுதியில் நாயக்கர்கள் பண்ணைகள் உள்ளன. அந்த நாயக்கர்களின் பண்ணைகளில் மிகவும் முக்கியமான நாயக்கரி சீரும், சிறப்புடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பண்ணையில் உள்ள மாடுகளை மலைக்கு ஓட்டி சென்று மேய்த்து வருவது மாடு ஓட்டியின் வேலை. ஒரு நாள் ஒருகாரம் பசு மலையின் உச்சிக்கு மேயச்சென்று விட்டது. மாடு ஓட்டி, மாட்டை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று பண்ணை நாயக்கரிடம் கூறினான்.
ஆனால் காராம் பசுவை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என நாயக்கர் கூறிவிட்டார். காராம் பசுவை மலை உச்சிக்கு சென்று தேடி பார்த்த பொழு ஒரு சிறுவன் பசுவின் மடியில் பால்குடிப்பதை கண்டு அதிசயத்து போனான் மாடு ஓட்டி. இந்நிகழ்ச்சியை பண்ணை நாயக்கரிடம் கூறிய போது மடு ஓட்டி கண் தெரியாமல் மயக்கமுற்றான். நாயக்கரும் துயரமுற்றார். அன்று நாயக்கர் கனவில் பெருமாள் திருக்கோவில் கட்டும்படியும் அதனை நாயக்கர் பூஜை செய்து வழிபாடு செய்து வரும்படி கூறியபடி திருக்கோவில் கட்டினார். இதன் முதற்கொண்டை இத்திருத்தலங்கள் நாயக்கர் வம்சாவழி பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து வருகின்றனர். தற்பொழுது தர்மகர்தாக்கள் உயர்திரு திரு. வெங்கட்டராம நாயுடுவின் வாரிசுதாரர்கள் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
Copyright © 2019. All Rights Reserved.
Site Designed & Maintained by Temple Trust Management.